குமரியில் மீனவர்கள் ஒத்துழைப்புடன் கடலோர கிராமங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்படும்: கலெக்டர் தகவல்

நாகர்கோவில், ஜூன் 25 : குமரி கடலோர கிராமங்களில் மீனவர்களின் ஒத்துழைப்புடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்படும் என்று கலெக்டர் அரவிந்த் கூறினார். குமரி மாவட்ட மீனவர் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை வகித்தார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: கடலோர கிராமங்களில் குப்பைகளை சேகரித்து உள்ளாட்சி பணியாளர்கள் அந்தப் பகுதியில் வைத்தே தீ வைத்து எரிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குறிப்பாக கொல்லங்கோடு நகராட்சி பகுதிகளில் குப்பைகளை சேகரித்து குடியிருப்பு பகுதியில் எரிப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது . எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர சாலைகளை ஒருங்கிணைத்து நெடுஞ்சாலை துறையின் கீழ் கொண்டு வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கைத விளாகம், மேல் மிடாலம், ஹெலன் நகர் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். எனவே நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சாலைகளை ஒருங்கிணைத்து சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். கடல் சீற்றம், கடல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும்.

கடலோர கிராம பகுதிகளுக்கு தரமான பஸ்களை இயக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக கடலோர கிராமங்களில் இருந்து வைக்கப்படும் கோரிக்கைகளை போக்குவரத்துத்துறை செயல்படுத்துவதில்லை. எனவே முறையாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . கடலோர கிராமங்களில் பல வழித்தடங்களில் இயங்கிவந்த பேருந்துகளை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். கடலோரப் பகுதிகளில் புதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. போக்குவரத்துத்துறை கடலோர கிராம மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். ரத்து செய்யப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும்.

கடலோர கிராமங்களில் உள்ள துணை சுகாதார நிலையங்களிலும் டாக்டர் நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறும்பனையில் உள்ள 3 பஞ்சாயத்துக்களை ஒரே பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் இவ்வாறு விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பங்கு தந்தையர்கள், மீனவ பிரதிநிதிகள் கடலோர பகுதிகளில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்பட போதை பொருட்கள் விற்பனை அதிகமாக நடக்கிறது. வட மாநிலத்தவர்கள் அதிகம் பேர் கடலோர பகுதிகளில் வருவது அதிகரித்துள்ளது. எனவே இந்த பழக்கத்தில் இருந்து இளைஞர்களை மீட்க வேண்டும். போதை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்றனர்.

அப்போது பேசிய கலெக்டர் அரவிந்த், குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலை பாதுகாப்பு குழு கூட்டம் போல், போதை பொருள் விற்பனையை தடுக்கும் வகையிலும், போதை பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்படும். கடலோர கிராமங்களில் மீனவர்கள் ஒத்துழைப்பு அவசியம் ஆகும். நமது மாவட்டம் கடல் வழி போக்குவரத்து அதிகமாக உள்ள மாவட்டமாக இருப்பதால், போதை பொருட்களை ஒழிக்க மீனவர்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்றார்.

 இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய்  அலுவலர் சிவப்பிரியா, துணை இயக்குநர் (மீன்வளம் மற்றும் மீனவர்  நலத்துறை) காசிநாதபாண்டியன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் ஜெரோலின், உதவி இயக்குநர்கள், அரசுத்துறை  அலுவலர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். குளச்சல் மீன்பிடி  துறைமுகம் விரிவுபடுத்தப்படும் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் பேசுகையில், கீழ மணக்குடி, மணக்குடி, பள்ளம், பெரியகாடு மீனவர்கள் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சின்னமுட்டம் சார்ந்த நாட்டுப்படகுகள் நிறுத்தும் இடத்தின் அருகே நிறுத்திட வேண்டும். அங்கிருந்து தொழில் புரிந்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை விரிவுபடுத்தி மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு அதற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீரோடி, வள்ளவிளை மற்றும் மார்த்தாண்டம் துறையில் தமிழக அரசின்  சார்பில் ரூ.116 கோடிக்கு நேர்கல் சுவர்களுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்க ஆணை வழங்கப்பட்டுள்ளதோடு, நேர்கல் சுவர்கள் மற்றும் மீன் ஏலக்கூடம்  அமைக்கப்பட்டுள்ளது. தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தை  ஒருங்கிணைந்த மீன்பிடித்துறைமுகமாக மேம்படுத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை இத்துறைமுகத்தை சுற்றியுள்ள நீரோடி, வள்ளவிளை மற்றும்  மார்த்தாண்டம்துறை உட்பட 15 மீனவ கிராமங்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.

Related Stories: