கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் 24.5 பவுன் செயின் பறிப்பு

கள்ளக்குறிச்சி, ஜூன் 14: கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெரு அருகே உள்ள பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு முறைப்படி தகவல் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் யாரும் வரவில்லை. பாதுகாப்புக்கு  போலீசார் யாரும் வராததை அறிந்த கொள்ளையர்கள்,  கும்பாபிஷேகம் நடந்தபோதும், தொடர்ந்து அன்னதானத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மூன்று பெண்களிடம் தாலி செயினை பறித்து சென்றனர்.  கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெருவை சேர்ந்த கந்தசாமி மகள் விஷ்ணுபிரியா(24) என்பவரிடமிருந்து 7 பவுன் தாலிசெயினையும், கள்ளக்குறிச்சியை மணிகூண்டு பகுதியில் உள்ள கடை வியாபாரி ஆசைதம்பி மனைவி  சொர்ணபுஷ்பம் என்பவரிடம் 13.5 பவுன் நகை, ேமலும் ஒரு பெண்ணிடம் 4 பவுன் நகை என மொத்தம் 24.5 பவுன் நகைகளை மர்ம கும்பல் பறித்து சென்றது. கூட்ட நெரிசல் குறைந்த பிறகே தங்களது கழுத்தில் கிடந்த நகைகள் பறிபோனதை 3 பெண்களும் உணர்ந்தனர். அதன்பிறகு கூச்சல்போட்ட கதறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள்  கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: