திருவாரூர் அருகே போர்வெல் குழியில் விழுந்த நாய்குட்டி போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருவாரூர், ஜூன் 14: திருவாரூர் அருகே போர்வெல் அமைக்க தோண்டப்பட்ட குழியில் 15 அடி ஆழத்தில் தவறி விழுந்த நாய் குட்டியை 5 மணி நேர பேராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவாரூர் அருகே குன்னியூர் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் வேப்பதாங்குடி சாலையில் மணல், ஐல்லி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவரது கடையின் அருகே மற்றொரு நபர் மூலம் போர்வெல் அமைப்பதற்காக 30 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு அங்கு நீர் இல்லாததால் அப்படியே விடப்பட்டது. இந்நிலையில் 30 அடி ஆழத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மண் தூர்க்கப்பட்டு 15 அடி ஆழத்தில் அந்த குழி தற்போது இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நாய் குட்டி ஒன்று அந்த போர்வெல் குழியினை பார்த்து கத்திக் கொண்டிருந்துள்ளது. இதைப்பார்த்த மூர்த்தி அருகில் சென்று பார்த்தபோது, அந்த குழியில் குட்டிகுட்டி விழுந்து வெளியில் வரமுடியாமல் குரைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூர்த்தி தனது நண்பர்கள் உதவியுடன் நாய் குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டும் முடியாதததால் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், சுருக்கு கயிறு மூலம் நாய் குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. பின்னர் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து இயந்திரம் மூலம் போர்வெல் குழி அருகே பள்ளம் தோண்டி நாய் குட்டியை மீட்பது என முடிவெடுத்தனர். இதையடுத்து மூர்த்தி தனது சொந்த செலவில் வாடகைக்கு பொக்லைன் இயந்திரத்தை உடனடியாக ஏற்பாடு செய்தார். சம்பவ இடத்திற்கு உடனடியாக வரவழைக்கப்பட்ட பொக்லைன் இயந்திரம் மூலம் போர்வெல் குழி அருகாமையில் 15 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர் பள்ளத்திலிருந்து போர்வெல் குழிக்கு துளையிட்டு நாய் குட்டியை உயிருடன் மீட்டார். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நாய்குட்டி மீட்டக்கப்பட்டு தாயுடன் சேர்க்கப்பட்டது. இச் சம்பவம் குன்னியூர் கிராம மக்களிடையே மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

Related Stories: