வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி

நெல்லை, ஜூன் 9:  நெல்லை மாநகரின் இதயப்பகுதியாகத் திகழும் வண்ணாாபேட்டை பகுதியில் மக்கள் பெருக்கம், வாகனங்கள் பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாளுக்குநாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. மேலும் வண்ணாாபேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் ரவுண்டானா மற்றும் சுற்று வட்டார சாலை பகுதியில் பாதசாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக வியாபாரிகள் மற்றும் சாலையோர நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்திக்கு பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து முழுமையாக அகற்றுமாறு மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் உள்ளிட்ட குழுவினர் வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் நேற்று ஜேசிபிக்கள், லாரி சகிதமாக திரண்டு வந்தனர். பின்னர் ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு கடைகளை இடித்தும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக கடைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மேற்கூரைகள், வாறுகாலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சிமென்ட் சிலாப்புகள் மற்றும் விளம்பர பலகைகள் ஆகியன ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதேபோல் ரவுண்டானா தென்பகுதி முதல் வடபகுதி பஸ் நிறுத்தம் வரை சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான தள்ளுவண்டி கடைகள், பழக்கடைகள், சாலையோரம் கடைகளில் போடப்பட்டிருந்த சேர்கள், பெஞ்சுகள் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டு வாகனங்களில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து மேம்பாலத்தின் எதிர்திசையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.  ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் சேகர், சாலை ஆய்வாளர்கள் கண்ணன், பழனிராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர் நாராயணன், உதவி ஆணையாளர் லெனின், உதவி பொறியாளர் சிவசுப்பிரமணியன், சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் சுகாதார பிரிவு ஊழியர்கள் ஈடுபட்டனர். இப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: