மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில் 162 மனுக்கள் பெறப்பட்டது

மொடக்குறிச்சி, மே 26: மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த ஜமாபந்தியில் மொடக்குறிச்சி, அரச்சலூர் உள்வட்டத்தில் 162 மனுக்கள் பெறப்பட்டது.மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடைபெற்றது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் இலாஹிஜான் தலைமை தாங்கினார். மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மாசிலாமணி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஜமாபந்தியில் மொடக்குறிச்சி உள் வட்டத்திற்குட்பட்ட லக்காபுரம், சாத்தம்பூர், குருக்கம்பாளையம், காங்கயம்பாளையம், மொடக்குறிச்சி, எழுமாத்தூர், ஈஞ்சம்பள்ளி, புஞ்சை காளமங்கலம், நஞ்சை காளமங்கலம், நஞ்சை ஊத்துக்குளி, குலவிளக்கு, பழமங்கலம் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உள்ளிட்ட 80 மனுக்கள் பெறப்பட்டது.

இதேபோல் அரச்சலூர் உள்வட்டத்திற்குட்பட்ட விளக்கேத்தி, முகாசி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, அரச்சலூர், வடுகப்பட்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட வருவாய் கிராம பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் முதியோர் உதவித்தொகை, பல்வேறு உதவித் தொகைகள், பட்டா மாறுதல் உள்ளிட்ட 82 மனுக்கள் பெறப்பட்டது. மொடக்குறிச்சி, அரச்சலூர் உள்வட்டம் என மொத்தம் 162 மனுக்கள் பெறப்பட்டது. இன்று (26ம் தேதி) அவல்பூந்துறை உள்வட்டத்திற்கான ஜமாபந்தி நடைபெறுகிறது.

இந்த ஜமாபந்தியில் தலைமையிடத்து மண்டல தாசில்தார் கலைச்செல்வி, மண்டல துணை தாசில்தார் கற்பகம், தலைமை சர்வேயர் சாமிமுத்து, ஆர்ஐக்கள் மொடக்குறிச்சி அமிர்தலிங்கம், அரச்சலூர் பிரபு, அவல்பூந்துறை பிரதீப்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: