தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதியின்றி நைட்டிங்கேல் அம்மையார் சிலைக்கு பூமிபூஜை வீடியோ வைரலால் பரபரப்பு

ஆண்டிபட்டி, ஏப். 21: ஆண்டிபட்டி அருகே க.விலக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு நூற்றுக்கணக்கான செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் தலைமையில் செவிலியர் குடியிருப்பு வளாகத்தில் நைட்டிங்கேல் அம்மையாரின் சிலை நிறுவ முடிவு செய்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பூமி பூஜை நடத்தப்பட்டது.

 மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தில் அனுமதி பெறாமல் சிலை நிறுவ முயற்சிப்பதாகவும், இதற்காக மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களிடம் கட்டாயமாக பணம் வசூலிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திற்குள் சிலை நிறுவுவதற்கான எந்த பணிகளும் நடைபெற கூடாது என கல்லூரி முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செவிலியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: