கோயில் பணிக்காக வசூலித்த பணத்தை மீட்டு தர வேண்டும் கலெக்டர் ஆபிசில் பெண்கள் மனு

நாமக்கல், ஏப்.19: ராசிபுரத்தை அடுத்த ஆர்.கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பெண்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் 70 ஆண்டுக்கு முன்பு மாரியம்மன் கோயில் கட்டி, திருவிழாக்கள் நடத்தி வந்தோம். இந்த கோயில் திருவிழாவிற்கு வரி வசூலித்து பண்டிகை நடத்தி, மீதி தொகையை கடந்த 2017ம் ஆண்டு நல்லமுத்து என்பவரிடம் கொடுத்து வைத்தோம். இயற்கை சீற்றத்தால் பழுதான கோயிலை புதுப்பிக்க முடிவு செய்து, ஊர் மக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது. இந்த பணத்தை ஒப்படைக்கும்படி கூறிய போது, அவர் கொடுக்கவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்பு, குறிப்பிட்ட தொகையை ஒப்படைத்தார். மேலும், மீதி தொகையை வங்கி ஒன்றில் கணக்கு தொடங்கி வைத்துள்ளார். வங்கியில் உள்ள தொகையை ஒப்படைக்க வேண்டுமென கேட்ட போது, மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே, நல்லமுத்துவிடம் இருந்து ஊர் மக்களின் பணத்தை வசூல் செய்து, கோயில் கட்டுமான பணியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: