ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில் திருநடனத் திருவிழா

கும்பகோணம், மார்ச் 31: கும்பகோணம் அருகே ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில், 93ம் ஆண்டு திருநடனத் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று, வீதிகள் தோறும் திருநடனத்துடன் பவனி வந்த காளியம்மனுக்கு படையலிட்டு, தீபாராதனை செய்து வழிபட்டனர்.கும்பகோணம் அருகே ஆடுதுறை கஞ்சான் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள மதுர காளியம்மன் இப்பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது. இத்தலத்தில் 93வது ஆண்டு திருநடன திருவிழா கடந்த 21ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, காளியம்மன் திருநடனம் நேற்றுமுன்தினம் தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி (சனிக்கிழமை) வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, மதுரகாளியம்மன் திருநடனத்துடன் பவனி வரும் வீதிகளில் ஒவ்வொரு குடும்பத்தினரும் மாவிளக்கு ஏற்றிவைத்து, மதுர காளியம்மனை தங்கள் வீடுகளுக்கு வரவேற்றனர்.

அப்போது பூசாரி தீபாராதனை செய்ய, மதுரகாளி தனது திருக்கரங்களால், பக்தர்களுக்கு திருநீறு பிரசாதங்களை வழங்கியது. தொடர்ந்து வரும் ஏப்ரல் 8ம் தேதி (வெள்ளிக்கிழமை) அம்பாள் ஊஞ்சல் திருவிழாவும், அதனையடுத்து, 10ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வீரசோழ ஆற்றங்கரையில் 1008 பால்குட ஊர்வலம் அலகு காவடிகளுடன் வந்து, மதுரகாளியம்மனுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்ற பிறகு தயிர் பள்ளயம் இடப்பட்டு பக்தர்களுக்கு அன்னபிரசாதங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

Related Stories: