நாகை, மார்ச் 24: நாகை மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடப்பு கரீப் பருவத்திற்கு தேவையான யூரியா மத்திய அரசின் மூலமாக காரைக்கால் துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இதை கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:நடப்பு கரீப் பருவத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மற்றும் ஆந்திரபிரதேஷ் ஆகிய மாநிலங்களுக்கு மொத்தம் 44 லட்சத்து 36 ஆயிரத்து 905 மெட்ரிக் டன் இப்கோ யூரியா உரங்கள் வெளிநாட்டிலிருந்து ஒன்றிய அரசு மூலமாக காரைக்கால் துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சீரிய முயற்சியால் தமிழகத்திற்கு 22 லட்சத்து 336 ஆயிரத்து 905 மெட்ரிக் டன் இப்கோ யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் கரீப் பருவத்தில் நாகை மாவட்டத்திற்கு 8 ஆயிரத்து 740 மெட்ரிக் டன் யூரியா, 3 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் டிஏபி, 3 ஆயிரத்து 670 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் ஆயிரத்து 680 மெட்ரிக் டன் காம்ப்ளஸ் உரங்கள் ஒதுக்கீடு செய்து தர மாநில அரசிடம் கோரப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக நாகை மாவட்டத்திற்கு 140 மெட்ரிக் டன் யூரியா நாகை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவைகேற்ப இருப்பு வைக்கப்படும்.
