குன்றத்தில் திருக்கல்யாணம் இன்று தேரோட்டம்

திருப்பரங்குன்றம், மார்ச் 22: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை திருக்கல்யாணம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி காலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் மதுரையில் இருந்து புறப்பாடாகி திருப்பரங்குன்றம் வந்தடைந்தனர். பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து மணக்கோலத்தில் தெய்வானையுடன் குளக்கரையில் பெற்றோர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பின்பு சுவாமி கோயில் மண்டபங்களில் எழுந்தருளி கண்ணூஞ்சல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து கோயில் ஆறுகால் பீடத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு யாக சாலை பூஜைகள் முடிந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சியும், திருமண சம்பிரதாயங்களும் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முக்கிய விழாவான தேரோட்டம் இன்று காலை நடைபெற உள்ளது.

Related Stories: