182 ஏக்கர் அரசு நிலம் மோசடி வழக்கு பெரியகுளம் தாலுகா அலுவலக ஊழியர்களிடம் சிபிசிஐடி விசாரணை

தேனி, மார்ச் 10: தேனி மாவட்டத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் மோசடி வழக்கில் பெரியகுளம் தாலுகா அலுவலக பணியாளர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி, தாமரைகுளம், கெங்குவார்பட்டி உள்ளிட்ட வருவாய் கிராமங்களில் அரசுக்கு சொந்தமான 182 ஏக்கர் நிலம் பெரியகுளம் தெற்கு ஒன்றிய முன்னாள் அதிமுக செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் தனியார் பலருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் அளித்த புகாரின் பேரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதில் பெரியகுளம் கோட்டாட்சியர்களாக இருந்த ஆனந்தி, ஜெயப்பிரதா, தாசில்தார்கள் கிருஷ்ணகுமார், ரத்னமாலா, துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, சர்வேயர்கள் பிச்சைமணி, சக்திவேல், விஏஓ சுரேஷ், பெரியகுளம் தெற்கு ஒன்றிய முன்னாள் அதிமுக செயலாளர் அன்னபிரகாஷ், முத்துவேல் பாண்டியன், போஸ், அதிகாரிகளின் உதவியாளர்கள் அழகர்சாமி, ராஜேஷ் கண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு சம்பந்தமாக பெரியகுளம் தெற்கு ஒன்றிய முன்னாள் அதிமுக செயலாளர் அன்னபிரகாஷ், சர்வேயர் பிச்சைமணி, அதிகாரியின் உதவியாளர் அழகர்சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்நிலையில் நேற்று நில மோசடி தொடர்பாக பெரியகுளம் தாலுகா அலுவலக பணியாளர்கள் சிலர் தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். சிபிசிஐடி போலீஸ் டிஎஸ்பி சரவணகுமார், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டனர். நேற்று காலை முதல் மாலை வரை இந்த விசாரணை நடந்தது.

Related Stories: