ரூ.25 லட்சத்தில் மின் கட்டண வசூல் மையம்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் திறந்து வைத்தார்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் ₹25 லட்சம் மதிப்பிலான மின் கட்டண வசூல் மையத்தை எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள கூடுவாஞ்சேரி துணை மின்நிலைய வளாகத்தில் ₹25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுவாஞ்சேரி மேற்கு, கிழக்கு மற்றும் நகரம் பிரிவு அலுவலகங்களுக்கான மின் கட்டண வசூல் மைய திறப்பு விழா நேற்று நடந்தது.

திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், நகரமன்ற தலைவருமான எம்.கே.டி.கார்த்திக் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜி.கே.லோகநாதன், தொமுச துணை பொதுச் செயலாளர் சர்க்கரை, செங்கல்பட்டு மேற்பார்வை பொறியாளர் மணிமாறன், மறைமலைநகர் உட்கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுவாஞ்சேரி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் நாகராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு ₹25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மின் கட்டண வசூல் மையத்தை திறந்து வைத்தார். இதில், உதவி பொறியாளர்கள் ஜனார்த்தனன், மணி, சசிகுமார் உட்பட நகர மன்ற வார்டு கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி 7வது வார்டு, கற்பகாம்பாள் நகரில் உள்ள மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு பல ஆண்டுகளாக தூர்வாராமல் கிடப்பில் இருந்தது. இதனால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து, செல்வதற்கு வழியில்லாமல் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதையொட்டி அப்பகுதி மக்கள் கொசு தொல்லையால் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு செய்த நகரமன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், நகராட்சி ஊழியர்களிடம் உடனடியாக அதனை அகற்றி சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்பேரில், கால்வாயில் உள்ள அடைப்புகள் தூர்வாரப்பட்டு புதிதாக கல்வெட்டுகள் பதிக்கப்பட்டன.

பின்னர், நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படும் பெருமாட்டுநல்லூர் பெரிய ஏரியில் உள்ள 5 நீரேற்று அறைகளில் உள்ள மோட்டார் பழுதாகி கிடந்தது. அதனை சரி செய்ய வேண்டும், மேலும் 13வது வார்டு தேரடி மேட்டு தெருவில் கல்வெட்டு அமைக்க வேண்டும், 29வது வார்டில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அவருடன் நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி, வார்டு கவுன்சிலர்கள் நக்கீரன், திவ்யா சந்தோஷ்குமார், சுபாஷினி கோகுலநாதன், சசிகலா செந்தில், டில்லீஸ்வரி ஹரி, கௌசல்யா பிரகாஷ் உள்பட பலர் இருந்தனர்.

புதிய வழிதடத்தில் பஸ் இயக்கம்: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில், தெள்ளிமேடு, வேங்கடாபுரம், சாஸ்திரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார மக்கள், பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு போதிய பஸ் வசதியின்றி தவித்து வந்தனர். இதுதொடர்பாக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனனிடம், கோரிக்கை மனு அளித்த மக்கள், அப்பகுதியில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என கூறினர். இதையடுத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தலின்படி, செங்கல்பட்டில் இருந்து சிங்கபெருமாள் கோயில், தெள்ளிமேடு, வெங்கடாபுரம், கொளத்தூர், சாஸ்திரம்பாக்கம் வெம்பாக்கம், ரெட்டிப்பாளையம் வழியாக பாலூர் வரை செல்வதற்கு நேற்று முதல் அரசு பஸ் இயக்கப்பட்டது. அதனை, எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கொடியசைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில்,  காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன்,  நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், மாவட்ட  கவுன்சிலர் பூங்கோதை ராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் அருள்தேவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சண்முகம்,  தெய்வானை தர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: