மேலூர் அருகே பயங்கரம் கொடுத்த கடனை கேட்டவரை வீடு புகுந்து வெட்டிய கும்பல் 6 பேர் கைது: 11 பேர் மீது வழக்கு

மேலூர், பிப். 25: மேலூர் அருகே, சாத்தமங்கலம் நடுப்பட்டியைச் சேர்ந்த பார்த்திபன் (40), சாத்தமங்கலத்தை சேர்ந்த அருண்பாண்டியனுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.2 லட்சம் கடன் கொடுத்தார். நேற்று முன்தினம், கொடுத்த பணத்தை கேட்டதால் அருண்பாண்டியனுக்கும், பார்த்திபனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த அருண்பாண்டியன், அன்று இரவு 10க்கும் மேற்பட்ட ஆட்களுடன், பார்த்திபன் வீட்டிற்குள் நுழைந்து அவரை அரிவாளால் வெட்டினார். தடுக்க வந்த அவரது மனைவி பரமேஸ்வரி, குழந்தைகள், அவரது தந்தை மாரிமுத்து, தாயார் ராஜேஸ்வரி ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கினர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் பார்த்திபனும், காயங்களுடன் அவரது குடும்பத்தினரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதேபோல, முன்விரோதத்தால் நடுப்பட்டியைச் சேர்ந்த பாண்டி, அவரது மகன் யோகேஸ்வரன் ஆகியோரை வீட்டிற்குள் புகுந்து அருண்பாண்டியனும், அவரது ஆட்களும் தாக்கியுள்ளனர். இதில், தந்தை, மகன் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவங்கள் குறித்து கீழவளவு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மாவட்ட எஸ்பி பாஸ்கரன் உத்தரவின்பேரில், மேலூர் டிஎஸ்பி பிரபாகரன் தலைமையில், மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ், எஸ்ஐ பாலகிருஷ்ணன், கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் பத்மநாதன், எஸ்ஐ பாலமுருகன் ஆகியோர் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடினர். இதில், நடுப்பட்டியைச் சேர்ந்த பவித்ரன், இளையராஜா, சுந்தரேசன், மீனாட்சிபுரத்தை சேர்ந்த உதிஸ்குமார், சாத்தமங்கலத்தை சேர்ந்த ஹரீஸ், தனியாமங்கலத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளான அருண்பாண்டியன், தீனதயாளன், சித்திரை பெருமாள், கார்த்தி, கார்த்திக்ராஜா என 5 பேரை தேடி வருகின்றனர். விரைந்து செயல்பட்ட போலீசாரை எஸ்பி பாராட்டினார். மேலும், குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்தார்.

Related Stories: