தேனி-அல்லிநகரம் நகராட்சி 32வது வார்டில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் திமுக வேட்பாளர் வக்கீல் மா.செல்வம் உறுதி

தேனி, பிப். 18: தேனி-அல்லிநகரம் நகராட்சியில் 32வது வார்டில் திமுக சார்பில் வக்கீல் மா.செல்வம் போட்டியிடுகின்றார். இவர் கடந்த 10 நாட்களாக வார்டில் உள்ள வாக்காளர்களை வீடு வீடாக சென்று சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பின் போது, இப்பகுதியில் வாழும் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பேன். முதியவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கச் செய்வேன். தெருவிளக்கு, சாலை வசதி, வாறுகால் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவதில் முழு கவனம் செலுத்துவேன். குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கு உதவுவேன். மாணவ மாணவியரின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் ஹாக்கி, கால்பந்து, தடகள போட்டிக்கான பயிற்சி மையங்கள் அமைத்து தருவேன். பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை சிரமமின்றி பெற்றுத் தருவேன். நகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்கள் சம்பந்தமான பிரச்னைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பேன். இதற்காக வார்டு பகுதிக்குள் மக்கள் குறைதீர்க்கும் அலுவலகத்தை திறப்பேன். வீடற்ற ஏழைகளுக்கு அரசின் இலவச வீட்டு மனை திட்டத்தில் வீட்டுமனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுத்துத் தருவேன் என மக்களுக்கு உறுதியளித்தார்.

Related Stories: