மாசிமக விழா 5ம் திருநாள் ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலில் ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா

கும்பகோணம், பிப்.15: மாசி மக பெருவிழாவின் 5ஆம் நாள் இரவு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மகாமக பெருமை கொண்ட கும்பகோணம் மாநகரில் மாசிமகப்பெருவிழாவின் தொடக்கமாக ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட ஆறு சைவத் திருத்தலங்களில் கடந்த 8ம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றம் நடைபெற்ற ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மக பெருவிழா 5ம் நாளான நேற்றுமுன்தினம் இரவு பஞ்சமூர்த்திகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் எழுந்தருள, மங்கள வாத்தியங்கள் முழங்க, திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கொடியேற்றம் நடைபெற்ற 6 சைவத் திருத்தலங்கள் மற்றும் ஏக தின உற்சவமாக நடைபெறவுள்ள எஞ்சியுள்ள 6 சைவ திருத்தலங்களில் இருந்தும் என மொத்தம் பனிரெண்டு சைவ திருத்தலங்களில் இருந்து உற்சவர்கள் வருகிற 17ம் தேதி (வியாழக்கிழமை) பவுர்ணமியுடன் கூடிய மாசி மக நட்சத்திர தினத்தில் மகாமக குளத்தின் 4 கரைகளிலும் நண்பகல் 12 மணிக்கு ஒரே சமயத்தில் எழுந்தருள, மாசிமக தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

Related Stories: