குடியாத்தம் அருகே ஒற்றை யானை அட்டகாசம்

குடியாத்தம், பிப்.15: குடியாத்தம் அருகே ஒற்றை யானை அட்டகாசம் செய்ததால் வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டியடித்தனர்.குடியாத்தம் வனச்சரகம் தமிழக, ஆந்திர, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் மிகப்பெரிய வனச்சரகமாக உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்டவை உள்ளது. மேலும் ஆந்திர வனச்சரகத்தில் யானைகள் சரணாலயம் உள்ளதால், அங்கு உள்ள யானைகள் தமிழக வனப்பகுதியான குடியாத்தம் வனச்சரகத்தில் அவ்வப்போது நுழைந்துவிடுகிறது. அப்போது தமிழக யானைகளுடன் சண்டையிடும், ஆந்திர யானைகள் வழி தவறி குடியாத்தம மலை கிராமம் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்துவிடுகிறது.

இதேபோல் நேற்று அதிகாலை ஒற்றை யானை ஆந்திரா வனச்சரகத்தில் இருந்து தமிழக வனச்சரகமான குடியாத்தம் அடுத்த சைனகுண்டா, ஆம்பூரான்பட்டி, கொட்டமிட்டா ஆகிய கிராமங்களில் புகுந்தது. தொடர்ந்து விவசாய நிலங்களுக்குள் நுழைய முயற்சித்தது. அப்போது வன ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடியாத்தம் வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டி அடித்தனர். இச்சம்பவத்தால், விவசாய நிலங்களில் பயிரிட்டிருந்த பயிர்கள் தப்பியதால் விவசாயிகள் நிம்மதியடைந்தனர். ஆனாலும் ஒற்றை யானை மீண்டும் கிராமத்திற்குள் புகுந்துவிடுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: