பொன்னை, பிப்.12: பொன்னை அருகே பிரசித்திபெற்ற வள்ளிமலை முருகன் கோயிலில் மாசி மாத தேரோட்டம் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பிரமோற்சவம் நடைபெறுகிறது. அதையொட்டி 4 நாட்கள் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முதல் நாள் தேரோட்டம் தொடங்கியது. முன்னதாக காலை 8.30 மணி முதல் 10 மணிக்குள் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தேரின் மீது ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து நேற்று மாலை 5.30 மணியளவில் முதல் நாள் தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும், மாசிமாத பிரமோற்சவத்தை முன்னிட்டு கடந்த மாதம் 26ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்வு நடந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 4ம் தேதி விநாயகர் உற்சவம் நடைபெற்றது. இதில் முருகப்பெருமான் மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார்.
