சூலூர் அருகே இரு தரப்பினர் மோதல் ஒருவர் சீரியஸ்: 5 பேர் கைது

சூலூர் பிப்.10:  சூலூர் அருகே உள்ள போகம்பட்டி ஊராட்சி பொன்னாக்கானி கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி (70) பால் வியாபாரி். இவர் கடந்த திங்கட்கிழமை மாலை பால் கேனுடன் பனப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவரது பைக் மீது பொன்னாக்கானியைச் சேர்ந்த கேசவன் (45) என்ற கட்டிடத் தொழிலாளி வந்த வாகனம் மோதியது. விபத்தில் மயில்சாமி கொண்டு சென்ற பால் கேன் கவிழ்ந்து பால் ரோட்டில் கொட்டி  வீணாகியது.இந்த சம்பவம் தொடர்பாக சம்பவத்தன்று இரவு மயில்சாமி உறவினர்கள் கேசவன் வீட்டிற்கு சென்று கல்,மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கி அவரது வீட்டை சூறையாடினர். இதில் கேசவன் படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து கேசவன் உறவினர்கள் மயில்சாமி வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மயில்சாமி தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் சுல்தான்பேட்டை போலீசார் கேசவன் அவரது மகன் செல்வக்குமார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

படுகாயமடைந்த கேசவன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கேசவன் மனைவி லட்சுமி அளித்த புகாரின் பேரில் பொன்னாக்கானியைச் சேர்ந்த மாரிமுத்து, கோகிலவாணி, பழனிச்சாமி, மயில்சாமி, சுப்பிரமணி, பாலசுப்பிரமணி, பூபதி, கணேஷ் ,மோகன்ராஜ், விக்னேஷ், செந்தில், பாலகுரு, மகேத்திரன் மற்றும் தாமரைச் செல்வன் உள்ளிட்ட 14 பேர் மீது போலீசார் கொலை முயற்சி, அத்துமீறி தாக்குதல், வன்கொடுமைச்சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.இதில் மயில்சாமி (70), மாரிமுத்து (42),மோகன்ராஜ் (39),பூபதி (36),பாலகுரு (23) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்த கேசவன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொன்னாக்கானி மற்றும் போகம்பட்டி கிராமங்களில் சூலூர் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். இரு பிரிவினர் மோதல் காரணமாக அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

Related Stories: