சேத்தியாத்தோப்பில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ10 லட்சம் நகை கொள்ளை

சேத்தியாத்தோப்பு, ஜன. 29:  சேத்தியாத்தோப்பில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் வசித்து வருபவர் சுகவனேஸ்வரன் (30). இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு மீன்சுருட்டியில் நடைபெற்ற தனது நெருங்கிய உறவினரின் திருமணத்திற்கு தனது தாயார் மற்றும் குடும்பத்தாருடன் சில தினங்களுக்கு முன்பு சென்றிருந்தார்.

வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு பூட்டியிருந்த வீட்டினுள் புகுந்து பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நேற்று திருமணம் முடிந்து தனது வீட்டுக்கு சுகவனேஸ்வரன் வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே வீட்டினுள் சென்று பார்த்த போது, அங்கு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

 இதுகுறித்து சுகவனேஸ்வரன் சேத்தியாத்தோப்பு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு செய்தனர். கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து சற்று தூரம் ஓடி நின்றது, யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Related Stories: