திருச்செந்தூர் காவடி கட்டு பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும்

நாகர்கோவில், ஜன.21: தமிழ்நாடு செந்தூரான் பேரவை மாநிலத் தலைவர் சிவபாலன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:குமரி மாவட்டத்தில் குளச்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி கட்டி, சுமார் 150 கிலோமீட்டர் பாதயாத்திரையாக திருச்செந்தூர் சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நூற்றாண்டுகளை கடந்தும் பாரம்பரியமாக இந்த விழா நடைபெற்று வருகிறது. திருச்செந்தூரில் இந்த வருட மாசி திருவிழா வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி தொடங்க உள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி காவடி திருவிழா நடைபெறும்.

 தொடர்ந்து காவடி சுமந்து பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், தங்கள் காவடியில் சுமந்து செல்லும் பொருள்களை 4ம் தேதி, 5ம் தேதி, 6ம் தேதி ஆகிய நாட்களில் திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள். இந்தநிலையில் தற்போது கொரோனா நடவடிக்கையாக வார இறுதி நாட்களில் கோயில் தரிசனத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் திருச்செந்தூரில் திருவிழா நாளில் சுவாமி தரிசனம் செய்ய தடை வருமோ என பக்தர்கள் இடையே அச்சம் நிலவி வருகிறது.எனவே திருச்செந்தூர் மாசித் திருவிழா நாளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் எந்தவித தடையுமின்றி தரிசனமும், அபிஷேகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: