ஏடிஎம் கார்டு விவரங்களை கேட்டு மூதாட்டி வங்கி கணக்கில் அபேஸ் செய்த ₹2.50 லட்சத்தில் ₹65 ஆயிரம் மீட்பு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

வேலூர், ஜன.12: அடையாளம் தெரியாத நபரிடம் வங்கி ஏடிம் கார்டு விவரங்களை தெரிவித்து தனது சேமிப்பு கணக்கில் இருந்து மூதாட்டி இழந்த ₹2.50 லட்சத்தில் ₹65 ஆயிரத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார் எஸ்பி ராஜேஷ்கண்ணன் மூலம் அவரிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா(62). இவரை கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், ‘நான் வங்கி மேலாளர் பேசுகிறேன். உங்களது ஏடிஎம் கார்டு லாக் ஆகிவிட்டது. உடனே ஏடிஎம் கார்டு பற்றிய தகவல்களை தெரிவித்தால் செயல் பட வைப்பேன்’ என்று சொல்லியுள்ளார். அதை நம்பிய மூதாட்டி, அவருடைய வங்கி தொடர்பான ஓடிபி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அந்த ஆசாமியிடம் வழங்கியுள்ளார். அதை பெற்ற ஆசாமி, மூதாட்டி தனது பேத்தியின் திருமண செலவுக்காக இந்தியன் வங்கி கணக்கில் வைத்திருந்த பணம் ₹2 லட்சத்து 50 ஆயிரத்து 492ஐ அபேஸ் செய்தார்.

பணத்தை இழந்த மல்லிகா இதுகுறித்து சம்பந்தபட்ட இந்தியன் வங்கிக்கு சென்று புகார் அளித்தார். பின்னர் வேலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதன் பேரில் வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு மூதாட்டி இழந்த பணத்தில் ₹65 ஆயிரத்தை மீட்டனர். மீதி தொகை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட பணத்தை உடனடியாக எஸ்பி ராஜேஷ்கண்ணன் நேற்று மூதாட்டியிடம் ஒப்படைத்தார்.

Related Stories: