நெல்லையில் இரவு நேர முழு ஊரடங்கு தொடங்கியது

நெல்லை, ஜன.7: நெல்லை மாநகரில் இரவு நேர முழு ஊரடங்கு நேற்று தொடங்கியது. கொரோனா 3வது அலையை தடுக்கும் வகையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நெல்லை மாநகரில் நேற்று இரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டதோடு, சாலைகளும், தெருக்களும் வெறிச்சோடின. வெளியூருக்கு சென்ற அல்லது வந்த பஸ்கள் மட்டுமே எப்போதாவது தலைக்காட்டின. நெல்லை மாநகர சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 10 மணிக்கு மேல் சாலையில் சென்றவர்களை போலீசார் நிறுத்தி எச்சரித்து அனுப்பினர். தேவையின்றி வெளியில் சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் சென்னை, கோவை, மதுரை செல்லும் பஸ்கள் வழக்கம்போல் சென்றன. ஆனால் பஸ்நிலையத்தில் குறைந்தளவு பயணிகளே காணப்பட்டனர். திருச்செந்தூர் செல்லும் பயணிகள் பஸ்நிலையத்திலே படுத்து தூங்கினர்.  வண்ணார்பேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் பஸ்நிலையங்கள் பஸ்கள் இன்றி வெறிச்சோடின.

Related Stories: