வாறுகால் வசதி கேட்டு கிராமத்தினர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் ஆண்டிபட்டி அருகே பரபரப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தில் கழிவுநீர் வாறுகால் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள சின்னகாளியம்மன் கோயில் தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப்பகுதியில் கழிவுநீர் வாறுகால் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் கழிவுநீர் வாறுகால் வசதி அமைத்து தரவேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடமும், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திடமும் மக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், பிச்சம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஊராட்சி நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வாறுகால் வசதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தபிறகே, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: