கிராம தார் சாலை தரம் இல்லையென கூறி பிடிஒ அலுவலகத்தை அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் முற்றுகை: ஆய்வு செய்ததில் தரம் உறுதியானது

செய்யூர்: இரும்புலி கிராமத்தில் தார் சாலை தரம் இல்லை என அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டார். அதன் பின்னர், தார் சாலையை ஆய்வு செய்த பிடிஓ சாலை தரமாக உள்ளதாக தெரிவித்தார். சித்தாமூர் ஒன்றியம் இரும்புலி கிராமத்துக்கு செல்லும் 35 கிமீ சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இதையடுத்து, அங்கு புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி, பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாடு (2020-21) திட்டத்தின் கீழ், அப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்க ₹45.96 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது.

இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை தரமில்லாமல் உள்ளதாக கூறி, அதிமுகவை சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர், அவரது கட்சியினர் நேற்று காலை சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் திரண்டனர். பின்னர், அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். தொடர்ந்து, மாவட்ட உதவி செயற்பொறியாளர் சாந்தி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று சாலையின் தரத்தை சோதனை செய்தார். அதில், 2.5 (செமீ)  திட அளவில் போடவேண்டிய சாலை 3 (செமீ) அளவில் போடப்பட்டுள்ளதாகவும், சாலை தரமான முறையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, புகார் அளித்த அதிமுக பிரமுகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாலை ஆய்வின்போது ஒன்றியக்குழு தலைவர் ஏழுமலை, வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் சூரியகலா, ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டப்பின் தலைவர் நிர்மல்குமார் ஆகியோர் இருந்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘சாலை தரமாகவே இருக்கிறது. சிலரது காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்’ என்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சில மணிநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Related Stories: