திருப்பூர், டிச. 22: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தமிழக அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என, திருப்பூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக திருப்பூர் மத்திய மாவட்ட ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்வராஜ் தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில், பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பது. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவதை வரவேற்கிறோம். தேர்தல் பிரசாரத்தின் போது, ஒன்றிய அரசை அலறவிட்டவர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாக தொகுதி மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருப்பவர். அவர் அமைச்சர் ஆக வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புவது போல, திருப்பூர் மத்திய மாவட்ட திமுக சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறோம்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி அடைய இலக்கு நிர்ணயித்து பணி செய்வதற்கு ஏதுவாக 10 பேர் கொண்ட வாக்குச் சாவடி குழுக்களை உருவாக்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் நடத்தி வரும் நல்லாட்சியினால் பொதுமக்கள், இளைஞர், மகளிர், மாணவர் என அனைத்து தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர். அவர்களில் பலரும் திமுகவில் இணைந்து பணியாற்ற ஆவலோடு உள்ளார்கள். அவ்வாறு ஆர்வமாக உள்ளவர்களை கழகத்திலே இணைத்திடும் வகையில், துண்டறிக்கையை வீடு, வீடாக சென்று வழங்க வேண்டும். மக்களின் குறைகளை அவர்கள் சொல்லாமலே, அறிந்து தீர்க்கும் மாமன்னராக நல்லாட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின், அவரது பணிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் மக்களை காக்க ‘நம்மை காக்கும் 48’ என்ற உயிர்காக்கும் மருத்துவ திட்டத்தை துவக்கி அதில் தனியார் மருத்துவமனைகளையும் இணைத்ததற்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகர பொறுப்பாளர்கள் டி.கே.டி.மு.நாகராசன், தினேஷ்குமார், முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி, முன்னாள் மாநகர பொறுப்பாளர் மேங்கோ பழனிசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ், தெற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் பி.ஆர். செந்தில்குமார், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செந்தூர் முத்து, ஈஸ்வரமூர்த்தி, 15 வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் ராமதாஸ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் உமா மகேஷ்வரி, நிர்வாகிகள் சிவபாலன், திலக்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.