ஆசிரியர்கள் சங்க நிர்வாகக்குழு கூட்டம்

திண்டுக்கல், டிச.20: இடைநிலை ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இதில் மாநில பொதுச் செயலாளர் சங்கர் கூறியதாவது: தமிழகத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி ஆகியவற்றில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை தரம் உயர்த்தி பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் உள்ளனர். இந்நிலையில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலக் கல்வி கற்பிக்கப்படுகிறது.

இதற்கு புதிய ஆசிரியர்களை நியமிக்காமல் ஏற்கனவே இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை நியமித்து வருகின்றனர். இதனால் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்கள் எப்படி எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த முடியும். எங்கள் கற்றல் முறை வேறு. எல்கேஜி கற்றல் முறை வேறு. இந்த திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால். வரும் ஆண்டு ஜனவரி 5ம் தேதி அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தையும், மாவட்ட கல்வி அலுவலகத்தையும் முற்றுகையிட உள்ளோம் என்றார். இதில் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் ராஜரத்தினம், தலைவர் காட்டுதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: