வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வங்கிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது 220 வங்கிகள் 1500 ஊழியர்கள் பங்கேற்பு

வேலூர், டிச.17: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வங்கிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் 220 வங்ககளில் பணியாற்றும் 1500 ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து, கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதித்துறை பட்ஜெட்டில் ஒன்றிய அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் 2 வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கான முதல்கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்றும் இன்றும் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 220 வங்கிகளில் பணியாற்றும் 1500 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று காலை முதல் தொடங்கினர். இதனால் இரண்டு நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் ஸ்டிரைக் காரணமாக பணப்பட்டுவாடா உள்பட வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மொபைல் மற்றும் இன்டர்நெட்டில் வங்கி செயல்பாடுகள் தடை இன்றி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் வேலூர் அண்ணா சாலையில் உள்ள எஸ்பிஐ தலைமை அலுவலகம் முன்பு அனைத்து வங்கி ஊழியர்களின் வங்கி தொழிற்சங்கங்களின் மத்திய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடந்தது. யூஎப்பியூ அமைப்பின் வேலூர் தலைவரும், ஏஐபிஇஏ சங்கத்தின் நிர்வாகியுமான மில்டன் தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி சுரேஷ்குமார், எஸ்பிஐ வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ரஜனி, பேங்க் ஆஃப் இந்தியா அலுவலர் சங்கம் தென் மண்டல உதவி பொது செயலாளர் சுரேஷ் பரூரி, என்சிபிஇ ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க உதவி பொது செயலாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐஓபி அலுவலர் சங்கத்தின் நிர்வாகி ஜெயகுமார் வரவேற்றார். இதில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகி சலீம் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: