ராஜபாளையம் அருகே குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு: வீட்டுக்குள் நுழைந்த பச்சைப்பாம்பு

ராஜபாளையம், டிச. 16: ராஜபாளையம் தேவதானம் அருகே உள்ள அசையாமணி விளக்குப் பகுதியில் ராமேஸ்வரன் வீடு உள்ளது. இந்த வீட்டு பின்புறம் உள்ள பகுதியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராமேஸ்வரன் குடும்பத்தினர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சமூகநல வனவிலங்கு ஆர்வலர் கார்த்திக் சம்பவ இடத்திற்கு வந்து 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வன பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு சாஸ்தா கோயில் வனப்பகுதியில் விடப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தற்போது பெய்த மழையின் காரணமாக குளங்கள், கண்மாய்கள் நிறைந்துள்ளன. இதனால் குடியிருப்பு பகுதிகளிலும் மலைப்பாம்பு மற்றும் பாம்புகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது. எனவே, குடியிருப்பு பகுதியைச் சுற்றியுள்ள செடிகளை அகற்றிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், வன உயிரினங்கள் குடியிருப்புப் பகுதியில் தெரிந்தால் அதனை துன்புறுத்தாமல் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

வீட்டுக்குள் புகுந்த பாம்பு

திருவில்லிபுத்தூர் முதலியார்பட்டித்தெரு பகுதியில் வீடு ஒன்றில் 7 அடி நீள பாம்பு ஒன்று நுழைந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து திருவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிசாமி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று சுமார் ஏழு அடி நீளமுள்ள பச்சைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

Related Stories: