செய்யாறு, டிச.15: செய்யாறு ஆர்டிஓ அலுவலகம் எதிரே நேற்று பழங்குடியினர் சாதி சான்று கேட்டு பள்ளி மாணவ, மாணவிகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு உள்ளிட்ட தாலுகாக்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும், காட்டுநாயக்கன் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்களுக்கு சாதி சான்று, வீட்டுமனை பட்டா, அரசின் தொகுப்பு வீடு வழங்கக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில், ஒரு சிலருக்கு மட்டும் சாதி சான்று வழங்கிய நிலையில், பலருக்கு வீட்டுமனை பட்டா மற்றும் சாதி சான்று வழங்க வருவாய்த்துறையினர் மறுப்பதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து செய்யாறு ஆர்டிஓ அலுவலக எதிரே நேற்று காலை 11 மணியளவில், காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் பள்ளி மாணவ, மாணவிகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பழங்குடி மக்கள் வேட்டையாட பயன்படுத்தும் உபகரணங்கள், பல்லக்கு, வில், அம்பு மற்றும் காஸ் ஸ்டவ் ரிப்பேர் செய்வது, கலாய் பூசுவது போன்ற பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தும் உபகரணங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆர்டிஓ விஜயராஜ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட ஆர்டிஓ, இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய விசாரணை நடத்தி சாதி சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், வீட்டுமனை பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன்பேரில், மதியம் 3 மணியளவில் தங்களது போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.