ஜிஎஸ்டி உயர்வுக்கு எதிர்ப்பு பள்ளிபாளையத்தில் நாளை விசைத்தறிகள் வேலை நிறுத்தம்

பள்ளிபாளையம், டிச.9: விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதமாக உயர்த்திய ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (10ம்தேதி) பள்ளிபாளையத்தில் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜவுளி உற்பத்திக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. இந்த வரி விதிப்பால் துணிகளின் விலை மேலும் உயரும். ஜவுளித்தொழில் பெரும் நெருக்கடியை சந்திக்க கூடும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்இ பள்ளிபாளையம் லுங்கி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் காவேரி சண்முகம், அண்ணா நகர் நவராஜ், ஆவத்திபாளையம் வாத்தியார் பாலசுப்பிரமணியம், புளியங்காடு மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் 12 சதவீதமாக ஜிஎஸ்டி உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வரியை உயர்த்தி உள்ளதால் ஜவுளி உற்பத்தி தொழிலே முடங்கும் அபாயத்தில் தள்ளப்பட்டுள்ள எனவும், வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதற்கட்டமாக நாளை (10ம்தேதி) அனைத்து விசைத்தறி தறிக்கூடங்கள், ஜவுளி உற்பத்தி நிலையங்களையும் அடைத்து உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் என  அறிவித்து உள்ளனர். இதன்படி அன்றைய தினம் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை, விசைத்தறி கூடங்கள் இயங்காது என அறிவித்தனர்.

Related Stories: