காரியாபட்டி பகுதி நான்குவழிச்சாலையில் 10 இடங்களில் பாலம், சர்வீஸ் ரோடு அமைக்க அரசு அதிகாரிகள் ஆய்வு

காரியாபட்டி, டிச. 9:காரியாபட்டி பகுதி நான்கு வழிச்சாலைகளில் அதிகளவில் விபத்துகள் ஏற்படும் 10 இடங்கள் ‘பிளாக் ஸ்பாட்’ ஆக தேர்வு செய்யப்பட்டு, அந்த இடங்களில் போலீஸ், போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் விபத்து, உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்க போலீசார் மாவட்டம்  முழுவதும் சர்வே எடுத்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக நான்குவழிச்சாலை சந்திப்புகளில் பதிவான விபத்துகள், உயிரிழப்புகள் எண்ணிக்கை, அது நிகழ்ந்த பகுதிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்தனர். அதன்படி, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதி நான்குவழிச் சாலைகளில் கல்குறிச்சி, தோணுகால், மந்திரிஓடை, ஆவியூர் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களை ஆய்வு செய்து அதிகளவில் விபத்து  இடங்களை ‘பிளாக் ஸ்பாட்’ என வகைப்படுத்தினர். அந்த இடங்களில் விபத்துகளை குறைக்க விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வராஜ், காரியாபட்டி இன்ஸ்பெக்டர் முக்கன், மதுக்கான் நிறுவன திட்ட அலுவலர் சிங்காரவேல், மதுக்கான் திட்ட மேலாளர் பிரபு ஆகியோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு புள்ளிவிவரத்தின்படி, சுமார் 500க்கும் மேற்பட்ட விபத்துக்களும், அதில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அதிக விபத்து நடக்கும் இடங்களை ஆய்வு செய்து மேம்பாலம் கட்டுவதற்காக அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். மேலும், தற்காலிகமாக எச்சரிக்கை பலகை வைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: