அண்ணாமலையார் கோயிலில் தாராபிஷேகம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது

திருவண்ணாமலை, மே 3: சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயில் நாளை தொடங்குகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நாளை முதல் வரும் 29ம் தேதி வரை தாராபிேஷகம் நடைபெறும். தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் வரலாறு காணாத அளவில் அதிகரித்திருக்கிறது. சுட்டெரிக்கும் வெயில் பாதிப்பால் பொதுமக்கள் தவியாய் தவிக்கின்றனர். வெயில் அளவு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கோடை வெயிலின் அதிகபட்ச பாதிப்புக்குரிய நாட்களாக அமையும் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை (4ம் தேதி) தொடங்குகிறது. வரும் 29ம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும். அதில், முதல் 15 நாட்களுக்கு வெயில் அதிகமாகவும், பின்னர் படிப்படியாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் அக்னி நட்சத்திர காலத்தில் இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக, அக்னி தோஷ நிவர்த்திக்கான தாராபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாளை முதல் வரும் 29ம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு தாராபிஷேகம் நடைபெறும். அதைெயாட்டி, தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சுவாமி சன்னதி கருவறையில் இறைவனின் திருமேனியை குளிர்விக்கும்விதமாக, தாரா பாத்திரம் பொருத்தப்பட்டு, வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனிதநீர், இறைவனின் திருமேனியில் துளித்துளியாய் விழும்.

மேலும், தாராபிஷேகம் நடைபெறுவதால், வழக்கமான வழிபாடுகளிலும், தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிப்பதிலும் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான தினசரி வழிபாடுகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அக்னி நட்சத்திரத்தின் நிறைவாக 29ம் தேதி சிறப்பு யாகம் நடைபெறும். இந்நிலையில், அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கும் முன்பே, திருவண்ணாமலையில் கோடை வெயில் உச்சத்தை தொட்டிருக்கிறது. அதிகபட்சமாக நேற்று 108.6 டிகிரி வெயில் அளவு பதிவானது. அதனால், நேற்று பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாலைகளில் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் வெகுவாக குறைந்தது. மாலை 5 மணி வரையிலும் வெயில் பாதிப்பு இருந்தது. அனல் காற்றும் வீசியதால் மக்கள் பெரிதும் தவித்தனர்.

The post அண்ணாமலையார் கோயிலில் தாராபிஷேகம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது appeared first on Dinakaran.

Related Stories: