(தி.மலை) பெண்கள் திடீர் சாலை மறியல் ஆரணி அருகே பரபரப்பு 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து

ஆரணி, டிச.8: ஆரணி ஊராட்சி ஒன்றியம் கனிகிலுப்பை ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவராக கன்ராயன், ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் இருந்து வருகிறார்.

மேலும், ஊராட்சி சார்பில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 625க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 100 நாள் வேலை செய்து வருகின்றனர். இத்திட்டத்தில் ஊராட்சியில் ஒதுக்கப்பட்ட பகுதிகளில் முறையாக வேலை செய்யாமல், வருகை பதிவேட்டில் வேலைக்கு வந்ததாக கணக்கு காண்பித்துவிட்டு செல்வதாக கூறப்படுகிறது.

இதனால், அதிகாரிகள் மற்றும் பணிமேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்தபோது முறையாக வேலை செய்பவர்களுக்கு மட்டுமே வருகை பதிவேட்டில் கையெழுத்து வாங்குமாறு பணித்தளப் பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளனர். அதேபோல், தொடர் மழை காரணமாக கனிகிலுப்பை ஊராட்சியில் நீர்நிலைகள், கால்வாய்களில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால், அதற்கு பதிலாக கனிகிலுப்பை ஊராட்சிக்கு செல்லும் சாலை ஓரங்களில் சுத்தம் செய்ய பணிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், அப்பகுதியில் முறையாக வேலை செய்யாததால், 2 வாரங்களாக முறையாக வேலை வழங்காமல் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரணி-செய்யாறு செல்லும் சாலை எஸ்வி.நகரத்தில் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துகுமார் மற்றும் போலீசார், ஊராட்சிமன்ற தலைவர் கன்ராயன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதனை ஏற்க மறுத்த பெண்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முறையாக வேலை வழங்கும் வரை மறியலை கைவிடமாட்டோம் என தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, அங்குவந்த பிடிஓக்கள் இந்திராணி, சீனிவசன், பயிற்சி டிஎஸ்பி ரூபன்குமார் ஆகியோர் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: