புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

ஈரோடு, டிச. 6: ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஈரோடு ஸ்டேட் பேங்க் ரோட்டில் பழைமை வாய்ந்த புனித அமல அன்னை தேவலாயம்(சர்ச்) உள்ளது.  இந்த தேவலாயத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தேர்த்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, நடப்பாண்டுக்கான தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையுமான ஜான்சேவியர் தலைமை தாங்கினார்.

காங்கேயம் குழந்தை மாதா திருத்தல அதிபரும், பங்குத்தந்தையுமான கிளாடியஸ் திருப்பலி(பூஜை) நிறைவேற்றினார். பின்னர் அமல அன்னையின் திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். விழாவையொட்டி நற்கருணை(புதுநன்மை) வழங்கும் வழிபாடும் நடந்தது. இதைத்தொடர்ந்து 8ம் தேதி முதல் சிறப்பு திருப்பலிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 12ம் தேதி தேர்த்திருவிழா துவங்குகிறது.

அன்றைய தினம் காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலிகள் நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெறாது. கடந்த ஆண்டை போலவே ஆலயத்தை சுற்றி தேரோட்டம் நடைபெற உள்ளது என ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: