அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

அரியலூர்,டிச.5: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் மற்றும் இருசக்கர வாகன பேரணியினை பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: அரியலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு கடைபிடிப்பது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஒளிபரப்பு செய்தல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் கூடுதல் அவசர விபத்து மற்றும் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நெடுஞ்சாலை ரோந்து குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இரவு, பகலாக போக்குவரத்து விதி மீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், ஒட்டுநர்கள் அனைவரும் சாலை விதிகளை கண்டிப்பாக கடைபிடித்திட வேண்டும். விபத்தில்லா பயணங்கள் மேற்கொள்ள சீரான வேகத்தில் பயணிக்க வேண்டும். பாதசாரிகள் சாலையின் இடது புறமாக எப்போதும் சென்றிட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் நியமிக்கப்படும் ஒட்டுநர்கள் தகுதியான, திறமை வாய்ந்த ஒட்டுநர்களையே பணியமர்த்தப்பட வேண்டும்.

அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் பொருத்தப்பட்டு வாகனங்களை நல்ல முறையில் பராமரிப்பு செய்து விபத்தில்லா மாவட்டமாக அரியலூரை மாற்றிட அனைத்து ஒட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மாரத்தான் ஓட்டத்தில் 250க்கும் மேற்பட்டவர் தலைகவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு 50 இருசக்கர வாகனங்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இருசக்கர வாகன பேரணி

கலெக்டர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது.

அதனை தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு அரங்கில் மாராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்கள், சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளையும், மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் விபத்தில்லாமல் சிறப்பாக பணியாற்றிய ஐந்து ஓட்டுநர்களுக்கு வெள்ளிகாசுகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சந்திரசேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர், அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், ஓட்டுநர் பயிற்சி மாணவர்கள், பயிற்றுநர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: