அரசு பள்ளி மைதானத்தில் மாணவர்களை விளையாட அனுமதிக்க கோரி பெற்றோர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டம்

ஈரோடு, டிச.3: ஈரோட்டில் அரசு பள்ளி மைதானத்தில் மாணவர்களை விளையாட அனுமதிக்க கோரி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 969 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம், பள்ளிக்கு அருகே 500 மீட்டர் தூரத்தில் உள்ளது.  அந்த மைதானத்தில் பள்ளியின் மாணவர்கள் சிலர், வாலிபால் விளையாடி வந்துள்ளனர். இதைப்பார்த்த பள்ளியின் தலைமையாசிரியர், விளையாடிய மாணவர்களை கண்டித்து, மாணவர்கள் யாரும் விளையாடாதபடி மைதானத்தை பூட்டு போட்டுள்ளார்.

இந்நிலையில், பள்ளி மைதானத்தை திறக்க கோரியும், வாலிபால் விளையாட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர் நேற்று மாலை சம்மந்தப்பட்ட பள்ளியினை முற்றுகையிட்டு, நுழைவு வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,``இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேசிய, மாநில அளவிலான வாலிபால் போட்டியில் விளையாடி தகுதி பெற்றுள்ளனர். தற்போது, பள்ளி மைதானத்தை திறக்காததால் மாணவர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. தலைமையாசிரியரிடம் நேரடியாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, அதனால் தான் போராட்டத்தில் ஈடுபட்டோம்’’ என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மாணவர்களின் பெற்றோர் கலைந்து போக மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை உதவி ஆய்வாளர் பால்ராஜ், பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பெற்றோர் கலைந்து சென்றனர்.

Related Stories:

More