பேரையூர் பகுதியில் வாழை, வெங்காயத்தில் நோய் தாக்குதல் தோட்டகலைத்துறை அதிகாரிகள் மீது புகார்

பேரையூர், டிச. 1: மதுரை மாவட்டம், பேரையூர் அருகே சந்தையூரில் 150 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், காஞ்சாரை நோய் தாக்கி, தார்விடும் நிலையில், வாழை பாதிக்கப்பட்டுள்ளது. இலைகள் அனைத்தும் காய்ந்து வருகின்றன. இதேபோல, இப்பகுதியில் 400 ஏக்கரில் சின்ன வெங்காயம், 80 ஏக்கரில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. வெங்காயத்தில் திருகல் நோய் தாக்கியுள்ளது. இதனால், வெங்காயம் அழுகுகிறது. நிலக்கடலை செடிகளில் கடலை வைக்காமல் கருகி வருகிறது. இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘வாழை, சின்னவெங்காயம், கடலை சாகுபடியில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதுவரை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை. பயிர்களை காப்பாற்ற ஆலோசனை வழங்கவில்லை. அரசு விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை அறிவித்தாலும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவதில்லை.

விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளை புரோக்கர்களுக்கு வழங்குகின்றனர். சந்தையூர் ஊராட்சி தலைவர் கூறுகையில், ‘இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக போதிய மழையின்மை, பருவம் தவறிய மழை ஆகிய காரணங்களால், விவசாயிகள் அதிக கொள்முதலைப் போட்டு குறைந்த மகசூலைப் பெறுகின்றனர். தற்போது தொடர்மழையால் வாழை, வெங்காயம், நிலக்கடலை சாகுபடி சேதமடைந்துள்ளது. வாழை சாகுபடியை சரி செய்யலாம். வெங்காயத்தை அழித்து விட்டுத்தான் மாற்று பயிரிடவேண்டும். எனவே, இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்’ எனக்கூறினார்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அதிகாரிகள் நேரடியாக வந்து பார்வையிட்டு, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: