காணொலி காட்சி மூலம் திமுக முகவர்களுடன் ஆலோசனை

நாமக்கல், ஏப்.23:தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2ம் தேதி எண்ணப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணிக்கை திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்குகள் எண்ணும் பணியில் கலந்துகொள்ள இருக்கின்ற திமுக முகவர்களுக்கு காணொலி காட்சி வாயிலான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. நாமக்கல் திமுக தலைமை தேர்தல் அலுவலக வளாகத்தில் இருந்த படி பயிற்சி முகாமில் மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் தலைமையில் திமுக முகவர்கள் கலந்து கொண்டனர். இதில் திமுக மூத்த வழக்கறிஞர் இளங்கோ எம்பி, காணொலி காட்சி மூலம் பேசியதாவது:

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் முகவர்கள், மிகுந்த பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்க வேண்டும். மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு தொடங்க வேண்டும். இதை கவனமுடன் பார்க்க வேண்டும். கடைசி 2 சுற்று வாக்கு எண்ணிக்கை இருக்கும் போதே, தபால் வாக்கு முடிவுகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவிக்க வேண்டும். இதில் எந்த தாமதம் வந்தாலும், அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. தபால் வாக்கு முடிவுகள் அறிவித்த பிறகே, கடைசி 2 சுற்று வாக்கு எண்ணிக்கை நடை பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முகாமில், மாநில இலக்கிய அணி புரவலர் மணிமாறன், சட்ட திட்டக்குழு உறுப்பினர் நக்கீரன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், வழக்கறிஞர் அமுதா, ஒன்றிய செயலாளர்கள் கவுதம், நவலடி, பழனிவேல், துரைராமசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>