முதியவரை சரமாரி தாக்கிய வாலிபர்கள் கஞ்சா விற்கும் இடம் எங்கே? என கேட்டு

வந்தவாசி, ஏப்.19: கஞ்சா விற்கும் இடம்கூட தெரியாதா? என கேட்டு வந்தவாசியில் முதியவரை மர்ம ஆசாமிகள் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் பஷீர் முகமது(65). இவர், நேற்று அதிகாலை டீ குடிக்க வீட்டில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள, தொடக்கப்பள்ளி அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள், ‘இந்த பகுதியில் கஞ்சா எங்கே விற்பனை செய்யப்படுகிறது’ என பஷீர் முகமதுவிடம் கேட்டனர். எனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறியுள்ளார்.

அதில், ஆத்திரமடைந்த வாலிபர்கள் பஷீர் முகமதுவை சரமாரியாக தாக்கி, அருகில் இருந்த சகதியில் தள்ளியதுடன், அவரது பாக்கெட்டில் இருந்த ₹50ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் காயமடைந்த பஷீர் முகமது வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து பஷீர் முகமதுவை தாக்கிய வாலிபர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், வந்தவாசி கோட்டைக்குள் தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாகவும், பல்வேறு பகுதிகளில் இருந்து அடையாளம் தெரியாத நபர்கள் அங்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பெண்கள் அவ்வழியாக கடந்து செல்ல முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். கடந்த வாரம் இந்த பகுதியில் கொலை சம்பவம் நடந்துள்ள நிலையில், கஞ்சா கேட்டு முதியவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>