பெருங்குளம் செங்கோல் ஆதீனம் மடத்தில் குருபூஜை விழா

ஏரல், ஏப்.19: ஏரல் அருகேயுள்ள பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் குருமுதல்வர் சத்தியஞான தரிசினிகள் குருபூஜை விழா நடந்தது. கொற்கை பாண்டிய மன்னர்களுக்கு முடிசூடி செங்கோல் வழங்கும் மாண்பை உடையது திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் ஆகும். ஆயிரத்து 500 ஆண்டு பழமையான இவ்வாதீன குருமுதல்வர் குருபூஜை பெருங்குளத்தில் உள்ள தலைமை மடத்தில் நடந்தது. இதனை முன்னிட்டு காலையில் நீடாமங்கலம் சுவாமிநாதன் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து சங்கை சுப்பிரமணியன் ஓதுவாமூர்த்திகளின் திருமுறை விண்ணப்பமும், பெருங்குளம் சித்தர் தபோவனம் குருமூர்த்த கோயில்களின் ஆதீனகர்த்தர் வழிபாடு, ஆதீன ஆன்மார்த்த மூர்த்தி அழகிய திருச்சிற்றம்பலமுடையார் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள் ஆதீன குருமுதல்வருக்கு மஹா அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தினார். இவ்விழாவில் திருமுறை பணிகளை பாராட்டி பொற்கிழி மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் திருஞானசம்பந்தரின் அற்புதங்கள் என்ற நூல் வெளியிடும் நிகழ்ச்சியும் நடந்தது. மதியம் மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு குருமகா சன்னிதானம் சிவஞான கொலுக்காட்சியுடன் குருபூஜை விழா நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சிற்றம்பலமுடைய தம்பிரான் செய்திருந்தார்.

Related Stories:

>