மாஸ்க் அணியாதவர்களிடம் ₹62 ஆயிரம் அபராதம் வசூல்

சேந்தமங்கலம், ஏப்.19: எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணாளன், அருளாளன் ஆகியோர் தலைமையில், ஊரக வளர்ச்சி அலுவலர்கள் பொன்னேரி கைகாட்டி, எருமப்பட்டி பேரூராட்சி, கடைவீதி, பொட்டிரெட்டிபட்டி, அலங்காநத்தம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த வணிக நிறுவனங்களுக்கும், வாகனத்தில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மளிகை கடை, காய்கறி சந்தை மற்றும் வணிக நிறுவனங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்தாமல் இருந்ததற்கு அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. எருமப்பட்டி ஒன்றியத்தில், இதுவரை கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், முகக் கவசம் அணியாதவர்கள் என 400 பேரிடம் ₹62 ஆயிரத்து 300 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>