கொள்முதல் செய்த நெல்லுக்குரிய விலை வழங்கக்கோரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகை ஆரணியில் 2வது நாளாக பரபரப்பு

ஆரணி, ஏப்.18: கொள்முதல் செய்த நெல்லுக்குரிய விலை வழங்கக்கோரி, ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மில்லர்ஸ் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆரணி, மேற்கு ஆரணி, கண்ணமங்கலம், தேவிகாபுரம், அரையாளம், வடுக்கசாத்து, இரும்பேடு, எஸ்.வி.நகரம், சேவூர், காமக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் ஏராளமான விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக தொடர் அரசு விடுமுறையால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் விற்பனை கூடத்தில் எடை போடாமல் இருந்தது. இதில், சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 7 ஆயிரம் நெல் மூட்டைகள் நேற்று முன்தினம் எடை போடப்பட்டது. அப்போது, கடந்த வாரத்தில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கு வழங்கிய விலையைவிட ₹300 குறைத்து விலை நிர்ணயம் செய்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு கண்டும்காணாமல் இருந்து வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கு உரிய விலை வழங்கக்கோரி திடீரென ஆரணி- வந்தவாசி, சேத்துப்பட்டு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து விற்பனை கூடத்திற்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அதிகாரிகள், வியாபாரிகள், விவசாயிகள் இடையே நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைகூட அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, போலீசார் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விலை பெற்று தருவதாக நாளை(நேற்று) வரும்படி கூறி விவசாயிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அதன்படி, நேற்று காலை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்தனர். அப்போது, எடை போட்டு வைத்திருந்த நெல் மூட்டைகளுக்கு புதிய விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நெல் மூட்டைகள் மட்டும் நேற்று முன்தினம் வழங்கிய விலையைவிட குறைவாக இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைகூட அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து வந்த ஆரணி டவுன் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, வியாபாரிகளிடம் பேசி நெல் மூட்டைகளுக்கான விலையை உயர்த்தி வழங்குமாறு ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து, நெல் மூட்டைகளுக்கு உரிய விலை வழங்கப்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை வியாபாரிகள் லாரியில் ஏற்றிச் சென்றனர்.

விவசாயிகள் முற்றுகையால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: