மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை பரிசீலனை ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம்

திருவண்ணாமலை, ஏப்.18: பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைப்பது குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை பரிசீலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரான திருவண்ணாமலைக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். எனவே, பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என சமீபத்தில் மக்களவையில் விமான திருத்தச்சட்ட மசோதா விவாதத்தின்போது திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என்.அண்ணாதுரை கோரிக்கை வைத்திருந்தார். மேலும், மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர், நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி, மத்திய அமைச்சரவை செயலாளர் ஆகியோரை சமீபத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு தற்போது அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

விமான திருத்த சட்ட மசோதாவில் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதை மத்திய அரசு கவனத்துடன் கருத்தில் கொண்டிருக்கிறது. பனிமூட்டம் மிகுந்த இடங்களில் விமானங்களை இயக்கும்போது ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க, உயர் தொழில்நுட்ப டிஓஎப் கேமரா சென்சார் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் விமான சேவையை அதிகரிக்கவும், அதற்காக தேவை மிகுந்த இடங்களில் சிறிய விமான நிலையங்களை ஏற்படுத்துவது தொடர்பாகவும் மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. எனவே, திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம் அமைக்க அனுமதிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும். மேலும், புதிய விமான நிலையங்கள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு குழுவிடம் முறையான விண்ணப்பம் பெறப்பட்டு, மத்திய அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் புதிய விமான நிலையம் அமைக்க பரிசீலினை செய்யப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: