கொரோனா பரவலால் களையிழந்த குலதெய்வ கோயில்கள்

சாயல்குடி, ஏப்.15: வேகமாக பரவி வரும் கொரோனா அச்சத்தால் தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளான நேற்று ராமநாதபுரம் மாவட்ட குல தெய்வ கோயில்கள், ஐயப்பன் கோயில்களில் சித்திரை விஷூ களையிழந்து காணப்பட்டது.

தமிழ் வருடப்பிறப்பான சித்திரை முதல்நாள் சித்திரை விஷூவாக கொண்டாடப்படுவது வழக்கம். பொதுமக்கள் குல தெய்வ கோயில், இஷ்ட தெய்வ கோயில்களுக்கு குடும்பத்தினருடன் செல்வர். கிராம பகுதிகளில் குலதெய்வம், கிராம தெய்வம் வழிபாட்டிற்கு பிறகு கோடை உழவு செய்வது வழக்கம். இதுபோன்று கேரளா மாநிலம், சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் சித்திரை விஷூ பிரசித்தி பெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து செல்வர். போக முடியாத ஐயப்ப பக்தர்கள் அந்தந்த பகுதிகளிலுள்ள ஐயப்பன் கோயில்களில் குருநாதர் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் செய்து, பழங்களை படைத்து வழிபடுவர்.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருஉத்திரகோசமங்கை மங்களநாதர், வராஹிஅம்மன் கோயில், திருப்புல்லானி ஆதிஜெகநாத பெருமாள்கோயில், நயினார்கோயில் நாகநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. தமிழ்புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், உள்பிரகார சாமி ஊர்வலம் போன்றவை நடைபெறாததால் பொதுமக்கள் பெரும்பாலானோர் செல்லவில்லை.

இதனால் பொதுமக்கள் பிரசித்தி பெற்ற கோயில்கள், குல தெய்வ கோயில்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே சாமி கும்பிட்டனர். இதுபோன்று மாவட்டத்திலுள்ள ஐயப்பன் கோயில்களில் குருநாதர்கள் மட்டும் கலந்து கொண்டு வழக்கமான பூஜைகளை செய்தனர். ராமநாதபுரம் அருகே உள்ள ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன், கடலாடி சபரிதோட்டம் ஐயப்பன், கடலாடி வடக்கு ஊரணி ஐயப்பன், சாயல்குடி சிவன்கோயில் ஐயப்பன், முதுகுளத்தூர் சுப்ரமணியர் கோயில் ஐயப்பன், கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயில்களில் ஐயப்பனுக்கு சிறப்பு மலர் அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. 10க்கும் மேற்பட்ட வகை பழங்களை படைத்து சிறப்பு பூஜைகள் குருநாதர்கள் தலைமையில் நடந்தது.

Related Stories: