பரமத்திவேலூர் கோயில்களில் விசேஷ வழிபாடு

பரமத்திவேலூர், ஏப்.15: பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன், முருகன் கோயில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகே, 16 அடி உயர பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோயிலில், 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பழம், காய்கறி, இளநீர் கரும்பு மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் நெய்தீபம் ஏற்றியும், அருகம்புல் மாலை சாற்றியும் வழிபட்டனர். அதே போல், பரமத்திவேலூர் ஐயப்பன் கோயிலில் பழவகைகள், மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும், கபிலர்மலை முருகன் கோயில், நன்செய் இடையாறு அக்னி மாரியம்மன் மற்றும் ராசா கோயில், பாண்டமங்கலம் பெருமாள் கோயில், கீரம்பூர் எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

Related Stories: