ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 35,874 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்

ராமநாதபுரம், ஏப்.10: ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 35,874 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரம், ஊரக வளர்ச்சி, காவல் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்

ஆலிவர் தலைமை வகித்து பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது சுகாதாரத் துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்கள், தனியார் மருத்துவமனைகள் என 101 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை 35,874 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் கொண்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொது இடங்களில் எச்சில் துப்புவோர், முகக்கவசம் அணியாதோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோருக்கு தலா ரூ.200, வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க அறிவிக்கப்பட்டது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.6.98 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு அறிவித்துள்ள வழிகாட்டல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார். கூடுதல் ஆட்சியர் பிரதீப் குமார், சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் பொற்கொடி, இந்திரா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் கேசவதாசன், நகராட்சி ஆணையாளர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: