சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலி

சேந்தமங்கலம், ஏப்.9:  கொல்லிமலை மாற்றுப்பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் தலையில் படுகாயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வாலிபர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் பூக்காரன் வயல் பகுதியை சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 15 பேர், கடந்தவாரம் கொல்லிமலைக்கு வேனில் சுற்றுலா வந்தனர். கொல்லிமலையில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, மாற்றுப்பாதை வழியாக ஊர் திரும்பினர். டிரைவர் மணிகண்டன்(26) வேனை ஓட்டி வந்தார். நரியங்காடு பூசணி குழிப்பட்டி இடையே, பெரியபொணக்காடு என்ற இடத்தில் வளைவில் திரும்பும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தாறுமாறாக ஓடி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த வாழவந்தி நாடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் காயமடைந்த 14 பேரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அவர்களை தஞ்சாவூர் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சுப்ரமணியம் மகன் சதீஷ்(25) என்பவரை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சதீஷ், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வாழவந்திநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>