தேர்தல் வாகன தணிக்கையில் பறிமுதல் செய்த ₹85.76 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு

நாமக்கல், ஏப்.9: நாமக்கல் மாவட்டத்தில், சட்டமன்ற தேர்தலையொட்டி,  வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க, ஒரு  தொகுதிக்கு 9 குழுக்கள் வீதம் மொத்தம் 54 பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. கடந்த 6ம் தேதியுடன் இந்த சோதனை முடிவடைந்து விட்டது. அதுவரை நடத்தப்பட்ட சோதனையில், மாவட்டத்தில் ₹1 கோடியே 11 லட்சத்து 22 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6,900 மதுபாட்டில்கள், சேலைகள் மற்றும் வேட்டிகள் என ₹6.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பரிசு பொருட்களின் மதிப்பு ₹1.17 கோடியாகும். இவற்றில் உரிய ஆவனங்களை காட்டியதால் ₹85.76 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.அடையாள அட்டையை காட்டி 9.99 லட்சம் பேர் வாக்களிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த தொகுதியில், 14 லட்சத்து 44 ஆயிரத்து 893 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 6ம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலில், 5 லட்சத்து 61 ஆயிரத்து 508 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 94 ஆயிரத்து 406 பெண் வாக்கார்கள், மற்றவர்கள் 58 என மொத்தம் 11 லட்சத்து 55 ஆயிரத்து 972 பேர் ஓட்டுபோட்டனர். இது 80 சதவீத வாக்குபதிவாகும்.

இதில் வாக்காளர் அடையாள அட்டையை காட்டி, 9 லட்சத்து 99 ஆயிரத்து 402 பேர் வாக்களித்து உள்ளனர். தேர்தல் ஆணையம் அறிவித்த, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்சு, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவனங்களை காட்டி, 1 லட்சத்து 56 ஆயிரத்து 846 பேர் வாக்களித்து உள்ளனர். 2 லட்சத்து 88 ஆயிரத்து 921 பேர் வாக்களிக்கவில்லை.

Related Stories: