உத்திரமேரூர் அருகே திரவுபதியம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா

உத்திரமேரூர் ஏப். 8: உத்திரமேரூர் அருகே நல்லூர் கிராமத்தில் அக்னி வசந்தவிழா நடைபெற்றது. உத்திரமேரூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதியம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த மாதம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் அக்னி வசந்த விழா துவங்கப்பட்டது. விழாவின் தொடக்க நாள் முதல் கோயில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் மகாபாரத நாடக நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், ஜலக்கிரிடை, வில் வளைப்பு, அல்லி அர்சுணா, அர்ச்சுணன் தபசு, விராடபருவம், கிருஷ்ணன் தூது, அரவான்கள் பலி, கர்ண மோட்சம், பதினெட்டாம் போர் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் முக்கிய நிகழ்வான பீமன் துரியோதனனை வதம் செய்யும் படுகளம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

நிகழ்ச்சியில் துரியோதனன், பீமன் வேடமிட்ட கட்டக் கூத்து கலைஞர்கள். நாடகம் நடித்தப்படியே கிராமப்புற வீதிகள் வழியாக படுகளம் நடக்கும் மைதானத்துக்கு சென்றனர். அங்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்த துரியோதனனின் மண் சிலையை, பீமன் துடையில் அடித்து வீழ்த்தும் காட்சி அரங்கேறியது. விழாவை காண நல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாலை தீமிதி திருவிழாவில் பக்தர்கள் விரதம் இருந்து வீதியுலா வந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.

Related Stories: