தொகுதி வாரியாக 2049 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனி அறைகளில் வைப்பு வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

நாமக்கல், ஏப்.8: தொகுதி வாரியாக 2049 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதியில் 2049 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குபதிவு, இரவு 7மணி வரை இடைவிடாமல் நடைபெற்றது. இரவு 7 மணி நிலவரப்பபடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதியிலும், சராசரியாக 79 சதவீத வாக்குள் பதிவாகியிருந்தது. கடந்த  2016 சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கை விட 1 சதவீதம் குறைவாக இம்முறை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் உள்ள  சட்டமன்ற தொகுதி வாரியாக இறுதி வாக்குபதிவு சதவீதம் விபரம்:

குமாரபாளையம்  78.81, நாமக்கல்  78.54, பரமத்திவேலூர்  81.13, ராசிபுரம் 82.19, திருச்செங்கோடு 78.71, சேந்தமங்கலம் 79 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இரவு 7 மணிக்கு வாக்கு பதிவு முடிக்கப்பட்டு அனைத்து கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில், வாக்குபதிவு இயந்திரங்கள் சீல் வைக்கபட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கெண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், நேற்று அதிகாலை வரை வாக்கு எண்ணும் மையத்தை சென்று அடைந்தது. அங்கு சட்டமன்ற தொகுதிவாரியாக தனித்தனி அறைகளில் வாக்குபதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து அறைகள் முன்பும், மத்திய போலீஸ் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தி நிறுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் மத்திய ராணுவ படையினர், தொடர்ந்து மாநில சிறப்பு போலீசார், அதை தொடர்ந்து மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  24 மணி நேரமும் சுழற்சி முறையில்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான மெகராஜ், மாவட்ட எஸ்பி சக்திகணேசன் ஆகியோர், வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

Related Stories: